Friday, May 7, 2010

அன்புள்ள நண்பர்களுக்கு

நனி ஜானகி
16/58, 3வது பெரிய தெரு,
ஸ்ரீ ஐயப்பா நகர்,
சென்னை - 600 092

07.05.2010
நேரம் பகல்: 12.00

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

இரண்டு தினங்களுக்கு முன்பு என் மகன் மு.நடேஷ் என் நண்பர் கி.அ.சச்சிதானந்தத்தின் பிளாக்கரை எனக்கு காண்பித்தான். அதைப் பார்த்தவுடன் இதுபோல் எனக்கும் ஒன்று வேண்டும் என்று தோன்றிற்று. என் ஆசையை அவனிடம் சொன்னேன். அவன் திரு.தளவாய் சுந்தரம் அவர்களை அழைத்து எனக்கு ஒரு பிளாக்கரை உண்டாக்கிக்கொடுக்கச் சொன்னான். அவர் அதை நேற்று இரவுதான் உண்டாக்கிக்கொடுத்தார். இன்று காலைவரை கூத்துப்பட்டறைக்கு ஸ்ரீதேவி வரட்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். அவர் வந்தவுடன் இதை எழுதி இதில் ஏற்றுகிறேன். இனிமேல் உங்களுடன் தொடர்ந்து பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அன்புடன்,
ந.முத்துசாமி

நனி ஜானகி: இந்தப் பெயர் என் வீட்டின் பெயர். இதில் உள்ள 'நனி' என்பது எங்கள் புஞ்சையின் பழைய பெயரான திருநனிபள்ளி என்பதிலிருந்து எடுத்தது. 'ஜானகி' என்பது என் மனைவியின் பாட்டியின் பெயர், இரண்டையும் பொருத்தி 'நனி ஜானகி' என்ற பெயரையிட்டுள்ளேன். என் மனைவியின் பாட்டிக்கு மாயூரத்தில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டை விற்ற பணம் முழுதும் இந்த வீட்டைக் கட்டுவதில் விழுந்துள்ளது. எங்கள் பாட்டியின் மாயூரத்து வீட்டைப்பற்றிக்கூற நான் எழுத இருக்கிறேன்.

கூத்துப்பட்டறை கடந்த ஏப்ரல் 28 லிருந்து மே 2 வரை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நான்கு கதைகளை நாடகமாக்கிய நிகழ்ச்சி ஒன்றை 'ஆற்றாமை' என்ற பெயரில் நிகழ்த்திற்று. இதற்கு ஈமெயிலின் மூலம் அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தோம். இதுவரை தியேட்டருக்குச் சென்று இப்படிப்பட்ட நாடகங்களை பார்த்திராத எங்கள் தெருவில் உள்ள பெரும்பாலானோரும் இன்னும் நண்பர்கள் சிலரும் வந்திருந்தார்கள். எல்லோராலும் மிகவும் ரசித்து பார்க்கப்பட்டு இந்த நாடகங்கள் பாராட்டப்பட்டன. இதில் அடங்கிய நாடகங்களைப் பற்றி கீழே எழுதுகிறேன்.

பிரசாதம்

சுந்தர ராமசாமியின் இந்த சிறுகதை 1958-ல் விஜய பாஸ்கரனின் சரஸ்வதியில் வெளிவந்தது. சி.சு.செல்லப்பாவின் எழுத்தும் க.நா.சுப்ரமணியத்தின் இலக்கிய வட்டமும் வந்துகொண்டிருந்த சேப்பாக்கம் சேர்ந்த திருவல்லிக்கேணியில் இப்பத்திரிக்கைகளுக்கு முன்னதாகவே விஜய பாஸ்கரனின் சரஸ்வதி இதே சேப்பாக்கத்திலுள்ள பெல்ஸ் ரோட்டிலிருந்து வந்துகொண்டிருந்தது. விஜய பாஸ்கரன் ஓர் இடதுசாரிக்காரர். மிகவும் அற்புதமான மனிதன்.

இந்த 'பிரசாதம்' சிறுகதையை காலச்சவடு வெளியிட்ட 'காகங்கள்' தொகுப்பிலிருந்து எடுத்து முன்னதாகவே எங்கள் சோமுவும், பாபுவும் என்.எஸ்.டி. பாலா (தேசிய நாடகப்பள்ளி, டெல்லி) இயக்கத்தில் தயாரித்திருந்தார்கள். ஆனால் அது அப்போது மேடையேறவில்லை. இப்போது பாபுவும், எங்கள் நடிகர்களில் ஒருவரான சாந்தாவும் (சாந்தகுமார்) சேர்ந்து மேடையேற்றினார்கள். சாதாரணமாக வாசிப்பின்போது வெளிப்படாத பல நுணுக்கமான விஷயங்கள் இந்த மேடையேற்றத்தின்போது பார்வையாளர்களுக்கு தெரியவந்தது. இரண்டு பேருக்கும் வேஷப்பொருத்தம் மிகவும் அற்புதமாக இருந்தது. சாந்தகுமார் போலீஸ்காரராகவும் பாபு நதிகிருஷ்ணன் கோயில் அர்ச்சகராகவும் வேஷம் தரித்திருந்தார்கள். வேறு சிறிய பாத்திரங்களில் சோமு, வடிவேலு, ஆதிரா, பாபி ஆகியோர் வந்துபோனார்கள்.

கருவேலமரம்

இது என்னுடைய கதை. இந்தக் கதை 1966 கணையாழியில் வெளிவந்தது. அப்போது நான் சிறுகதை ஆசிரியனாக வளர்வதற்கு கணையாழி பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. அப்போது கணையாழியில் பணியாற்றிக்கொண்டிருந்த அசோகமித்ரன் இந்தக் கதைகள் கச்சிதமாக மிகையாகாமல் வடிவம் எடுத்துக்கொள்ள இவற்றை எடிட் செய்து வெளியிட்டிருக்கிறார். அவருக்கு இப்போது நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஞானக்கூத்தனின் அறையில் ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு நான் அசோகமித்ரனுடன் பேசுவதை விட்டுவிட்டேன். என்றாலும் அவருக்கு நன்றி சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். (பார்த்தீர்களா தமிழ் மொழியை தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை எப்படி பாதித்திருக்கிறது என்று). சென்னையிலிருந்து அசோகமித்திரன் கணையாழியை கவனித்துக்கொள்ள டெல்லியில் அமெரிக்கா பத்திரிக்கை ஒன்றின் நிறுபராக இருந்த கி.கஸ்தூரிரங்கன் கணையாழியை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார். புதுக்கவிஞராக கஸ்தூரிரங்கனின் கவிதை ஒன்று இன்றும் என் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பழம்புளி

உன்னருகில் நானிருந்து
சென்ன கதையெல்லாம்
சுவையற்றுப் போனதென்ன?
என்னை எதிர்நோக்கி
வீதியின் கோடிவரை
விழிக்கடையில் சிறைப்படுத்தி
நிலைப்படியே நீயாக
நன்றிருப்பாய்-இன்றல்ல:
காரணமோ?
ஆணொன்றும் பெண்ணொன்றும்
குழந்தைகள்; காரியங்கள்
அடுப்பிலே புளிக்குழம்பு-

போகட்டும்.
சிரிக்காமற் போனாலும்
இனிக்காம லிருந்தாலும்
கசக்காது இருக்கிறதே
அதுவே போதும்.

-கி.கஸ்தூரிரங்கன்

இந்தக் கவிதையை சி.சு.செல்லப்பா வெளியிட்ட புதுக்குரல்கள் கவிதைகள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்தேன்.

எதுவோ சொல்ல வந்து நினைவிலிருந்து வேறு பிறவற்றை சொல்லிக்கொண்டு போகிறேன்.

கருவேலமரத்தின் முக்கிய கதாபாத்திரமான ராமானுஜம் பாத்திரத்தை சஞ்ஜீவி ஏற்றுக்கொண்டிருந்தார். இவருடைய அழகான பெயரான பெரியதம்பி என்பதை இவர் சினிமாவுக்காக சஞ்ஜீவி என்று மாற்றிக்கொண்டுவிட்டார். என்றாலும் இவர் எங்களுக்கு பெரியதம்பிதான். இன்று பிரபலமாகிவிட்ட விமல் என்ற நடிகரும் எங்களுக்கு என்றும்போல் மினி ரமேஷ்தான். அவருடைய புதிய படமான 'களவாணி' இசை வெளியீட்டு விழாவுக்கு நாங்கள் போயிருந்தோம். விழா முடிந்து வெளியில் வந்தபோது விமலின் பெற்றோர்களைப் பார்த்தோம். அவருடைய தந்தை விமல் என்று சொன்னபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பிறகு விமல் வந்து தன் தந்தையை அறிமுகப்படுத்தியபோதுதான் புரிந்தது.

'கருவேலமரம்' கதைகூட பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரிப்பூம்பட்டிணத்துக்கு அருகில் உள்ள புஞ்சையின் மொழி அவர்களுக்கு தங்கள் இளமைக்கால கிராம வாழ்க்கையை நினைவூட்டியதுபோலும். இந்த நாடகத்தில் பட்டாமணியமாக பாபியும், கர்ணமாக வடிவேலுவும், ரெவின்யூ இன்ஸ்பெக்டராக பாபுவும், கோவிந்தராசுவாக சாந்தகுமாரும், ராமானுஜத்தின் மனைவியாக ருத்ராவும் நடித்திருந்தார்கள். சோமு கதையை அறிமுகப்படுத்தியதோடு வேறு சிறிய பாத்திரங்களில் வந்துபோனார். ஆதிராவும் சிறிய பாத்திரங்களில் வந்துபோனார்.

ஆற்றாமை

கு.ப.ராஜகோபாலனின் 'ஆற்றாமை' கதையை சி.சு.செல்லப்பாவின் மேஜைக்கு அருகில் அமர்ந்து அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். இதில் வரும் அந்தரங்கம் ஆடையற்றுக்கிடந்தது என்ற வரியை அன்று பிற மணிக்கொடிக்காரர்கள் கதைக்கு தேவையில்லாத ஒரு வரி என்று விமர்சித்திருக்கிறார்களாம். ஆற்றாமை என்ற தலைப்பையே அது மற்ற கதைகளுக்கும் பொருந்துவதால் பொதுத்தலைப்பாக கொடுத்திருந்தோம். இதன் விளம்பரம் இந்து பத்திரிக்கையில் வந்திருந்ததை பார்த்துவிட்டு கரிச்சான்குஞ்சு அவர்களின் மகள் அவர்கள் எனக்கு ஃபோன் செய்தார். கு.ப.ராஜகோபலன் இந்தக் கதைக்கு முதலில் பொறாமை என்றுதான் தலைப்பிட்டிருந்தாராம். ஆனால் அதன் கதாநாயகியான சாவித்திரிக்கு இருப்பது பொறாமை அல்லவென்றும் அது ஆற்றாமை என்றும் சொன்னதின் பேரில் கதையின் தலைப்பை 'ஆற்றாமை' என்று மாற்றிவிட்டாராம்.

கரிச்சான்குஞ்சு அவர்களோடு நானும் பழகியிருக்கிறேன். அவருக்கு நான் ஒரு ஷீபர்ஸ் பேனா ஒன்று க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லியதின் பேரில் வாங்கிக்கொடுத்தேன். அவர் இன்று வெளியாகியிருக்கும் மகாபாரதம் தொகுதிகளை எல்லாம் இன்றைய தமிழில் எழுதுவதாக இருந்தது. ஆனால் அது நடைபெறவில்லை. இன்று அதை மொழிபெயர்த்தவரின் பேரனே அப்புத்தகங்களை போட்டோகாப்பி எடுத்து அச்சிட்டு வெளியிட்டுள்ள தொகுதிகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துகொண்டிருக்கிறது. இப்படி ஒரு மகாபாரதம் மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது என்பதைச் சொல்லி பழைய பிரதிகளை எனக்கு கொடுத்தவர் ராமகிருஷ்ணன்தான். அதிலிருந்து பல கதைகளை எடுத்து கூத்தில் புதிதாக நாங்கள் சேர்த்திருக்கிறோம். மேலும் பிரவசனமாக அ.சுப்ரமணிய பாரதி என்பவரால் அச்சிடப்பட்ட ஏடுகள் இன்று தூள்தூளாகிப் போய்க்கொண்டிருந்த ஒரு பதிப்பையும் எனக்கு மறைந்த திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கொடுத்திருந்தார். நினைவிலிருந்து பல விஷயங்கள் பெருகிக்கொண்டு போகிறது.

ஸ்ரீ மஹாபாரத பர்வங்கள் (வடமொழியில் ஸ்ரீ வேத வியாஸ பகவானால் அருளிச்செய்த ஸ்ரீமஹாபாரத்திற்குச் சரியான தமிழாக்கம்)

கும்பகோணம் காலேஜ் லேட் ஸம்ஸ்க்ருத பண்டிதர் மஹாவித்வான் சதாவதானம் ஸ்ரீ-உபய-வே தி.ஈ.ஸ்ரீநிவாஸாசாரியார் அவர்களால் மொழிபெயர்க்கப்பெற்று கும்பகோணம் காலேஜ் ரிடயர்ட் தலைமைத் தமிழ்ப்பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய, ம.வீ.இராமானுஜாசாரியரால் தொகுக்கப்பட்டு கும்பகோணம் ஸ்ரீ மஹாபாரதம் பிரஸில் லேட் சிவராமகிருஷ்ணய்யரால் அச்சிட்டு உரிமை பதிவுசெய்யப்பட்டது.

ஸ்ரீசக்ரா பப்ளிக்கேஷன்ஸ், சென்னை
எஸ்.வெங்கடரமணன்
போன்.044-24745505

இன்று டாக்டர்.ஆ.சதீஷ் அவர்கள் கு.ப.ராவின் கதைகள் எல்லாவற்றையும் தொகுத்து தன்னுடைய அடையாளம் என்ற பதிப்பகத்தின் மூலம் முழுத்தொகுப்பாக வெளியிட்டுள்ளார். அதிலிருந்துதான் நாங்கள் இந்த கதை ஆற்றாமையை எடுத்தோம்.

'ஆற்றாமை'யில் சாவித்திரியாக நடித்த ஆதிராவின் கதாபாத்திரம் மிகவும் நன்றாக வந்திருந்தது. கமலாவாக நடித்த ருத்ராவின் நடிப்பும் பிரமாதம். எப்போதும் ருத்ராவின் நடிப்புத் திறமையில் எனக்கு பெரிய நம்பிக்கை இருந்துகொண்டிருக்கிறது. அதை மீண்டும் உறுதிபடுத்தும் வகையில் ருத்ராவின் நடிப்பில் பாத்திரத்தின் நுணுக்கமான ஆளுமைப் பகுதிகள் துல்லியமாக வெளிப்பட்டிருந்தன. மற்றும் பாபி, வடிவேலு, பெரியதம்பி, பாபு, சாந்தகுமார் ஆகியோரும் இதில் நடித்திருந்தார்கள்.

ஜோதிடப்புலி

ஜோதிடப்புலி என்ற இந்தக்கதை சிரஞ்சீவி தொகுத்து எழுதிய சோமதேவபட்டரின் கதைக்கடல் என்ற பிரேமா பிரசுரத்தின் புத்தகத்திலிருந்து எடுத்தோம். இந்த நாடகத்தில் சோமு ஹரி என்ற ஜோதிடப்புலியாக நடித்தார். அவருடைய மனைவியாக ருத்தாவும், சூலதத்தனாக வடிவேலுவும், சூலதத்தனின் மனைவியாக ஆதிராவும், அரசனாக பெரியதம்பியும், குதிரையாக பாபியும் மற்றுமுள்ள பாத்திரங்களில் கூத்துப்பட்டறையின் இதர நடிகர்களும் பங்குகொண்டிருந்தார்கள். இந்தக் கதையை திறந்து வைத்த பாத்திரமான சோமுவின் ஹரி இதை மிகவும் பார்வையாளர்களின் பாராட்டுக்குரிய நகைச்சுவை நாடகமாக ஆக்கிவிட்டது.

இதர நடிகர்களைப் பற்றி நான் விரிவாக சொல்லாவிட்டாலும் குதிரையாக நடித்த பாபியைப் பற்றி சொல்லியாகவேண்டும். அவர் குதிரையின் தோற்றத்தையும் வடிவமைத்திருந்தார். அந்தத் தோற்றத்தில் அவர் குதிரையாகத் தோன்றி மிகவும் அற்புதமாக காட்சிப் படிமங்களை உண்டாக்கிக்கொண்டிருந்தார்.

இன்று கூத்துப்பட்டறையில் இருக்கும் நடிகர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இப்போது இருக்கும் இதர குழு உறுப்பினர்களும் மிகவும் திறமைசாலிகள். இந்த நாடகத்துக்கான விளக்கு வசதிகளை அந்த மொட்டை மாடியில் அமைத்து இயக்குவதற்கு காரணமாக இருந்த சிவா ஒரு முழுமையான திறமைசாலி. இந்த விஷயங்களை தட்டச்சு செய்துகொண்டிருக்கும் ஸ்ரீதேவியும் ஒரு திறமைசாலி. ருத்ராவும், ஆதிராவும் எங்கள் தெருவிலுள்ள அனைவரையும் நேரில் சென்று அழைத்து நாடகத்துக்கு பெரிய பார்வையாளர் தொகையை வரவழைத்துவிட்டார்கள்.

இதன் மேடை அமைத்தது நான்தான். திரு.ரவி என்பவரின் தச்சு வேலையில் இந்த மேடை உருவாக்கப்பட்டது. இந்த மேடையில் மிகவும் நெருக்கமான தொலைவில் அன்யோன்யமான சூழ்நிலையில் மு.நடேஷின் ஒளி அமைப்பில் நாடகங்கள் மிகவும் அற்புதமான காட்சிப்படிமங்களாக உருவாகியிருந்தன.

No comments:

Post a Comment