மதுரைவீரன் கூத்து
நேற்று இரவு (11.5.2010) ஆறுமுகம் வந்திருந்தார். அவர் தன்னுடைய தலைக்கோல் குழுவுடன் மதுரைவீரன் தெருக்கூத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்கா செல்ல இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து அவரை அழைத்தவர்களும் மதுரை வீரன் கூத்தை எடுத்துக்கொண்டுதான் வரவேண்டும் அதற்குத்தான் அழைப்பு என்று சொல்லிவிட்டார்களாம். அதன்பிறகு அவர் மதுரை வீரன் கூத்தை தேடிக்கொண்டு ராசிபுரம் சென்றிருக்கிறார். அங்கு தங்கி மதுரைவீரன் கூத்தை பார்த்துவிட்டு அவற்றை படம் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். அவரை அழைத்தவர்கள் சொன்னார்களாம் கூத்தில் பெண் பாத்திரங்களை பெண்களே நடிக்க வேண்டுமென்று. இப்போது அவர் மதுரைவீரன் கூத்துக் குழுவினரை அழைத்துக்கொண்டு போவதோடு அதிலுள்ள பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்க நவீன நாடக பெண் நடிகர்களை அழைத்துக்கொண்டுபோக இருக்கிறார். அதற்கான பயிற்சியும் ஒத்திகைகளும் நடந்துகொண்டு இருக்கின்றன.
ஏற்கனவே அவர் தான் துடும்பு வாத்தியக்காரர்களை கண்டுபிடித்து சொன்னவர். அதன் மூலம் மேட்டுப்பாளையத்துக்கு மேல் கண்ணார்பாளையத்தில் உள்ள துடும்பு வாத்தியக்காரர்களை கொண்டு வந்து கூத்துப்பட்டறையின் நடிகர்களுக்கு துடும்பில் பயிற்சி கொடுக்கப்பட்டது. அதன் பிறகு துடும்பு வாத்தியக்காரர்களோடும், நவீன நடிகர்களோடும் துடும்பு சென்னை நகரிலும் வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள (இன்று திருவண்ணாமலை மாவட்டம்) செய்யாறு, வந்தவாசி பகுதிகளிலும் கூத்துப்பட்டறையால் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் நாங்கள் நடித்த வீதி நாடகங்களிலும் கூட்டத்தை கூட்டுவதற்கு துடும்பைத்தான் பயன்டுத்திக் கொண்டோம். அவ்வகையில் சுனாமிக்காக வீதி நாடகங்கள் நடத்திய வகையில் சென்னையில் இருந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரை ஓர கிராமங்களிலும் குறிப்பாக நாகப்பட்டிணம் பகுதிகளிலும் துடும்பு பிரச்சாரமாயிற்று.
இப்போது ஆறுமுகம் மதுரைவீரன் கூத்தை கண்டுபிடித்திருக்கிறார். இதன் படத்தை பார்த்தீர்கள் என்றால் தெரியும், இது எவ்வளவு அற்புதமான கூத்து என்று. முதலில் மதுரைவீரன் பாத்திரம் வேஷம் கட்டிக்கொண்டு அதன் முதுகில் இருந்து வெளியே நீளும் திருவாச்சி போன்ற மூங்கில் குச்சிகளின் முனையில் பந்தம் கட்டப்பட்டு அவை எரிந்து கொண்டிருக்க ஆடிவரும் பாங்கு பிரமாதமாக இருக்கிறது. அந்த பாத்திரத்தின் கண்களுக்கு அவை திறந்தபடி இல்லாமல் பார்க்க வசதியாய் ஏதோ ஒரு கவசம் (கண்களுக்கு மட்டும்) கட்டப்பட்டு முகத்துக்கு ஓர் அதீத தோற்றம் உண்டாகிவிடுகிறது. முகத்திற்கு சிவப்பு நிறம் பூசப்பட்டிருக்கிறது. இந்த கூத்தன் தெருவில் ஆடி வரும்போது பந்தங்கள் எரிய பிரமாண்ட தோற்றத்துடன் வருகிறான். ஆனால் மேடைக்கு போகுமபோது தீப்பந்தங்கள் கழட்டப்பட்டு புஜகீர்த்திகள், தலைகிரீடம், மார்புபட்டை முதலிய அலங்காரங்களோடு மட்டுமே மிகப்பொலிவோடு மேடை ஏறுகிறான்.
பொம்மிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அலங்காரமும் மிக அற்புதமாக இருக்கிறது. தென்னங் குருத்தோலைகளால் புனையப்பட்ட சிறிய வீடு போன்ற தோற்றத்திற்குள் புகுந்துகொண்டு ஜன்னல் போன்ற ஒரு திறப்பின் மூலம் தன்னை வெளிக்காட்டிக்கொண்டு சாதாரண கால்களில் நடந்துகொண்டு வருகிறாள் பொம்மி. இந்த வேஷத்தை ஒரு ஆண்தான் தரித்திருக்கிறார். இப்போது ஒரு பெண்ணை அதற்கு பயிற்றுவிக்கப்போகிறார் ஆறுமுகம்.
இத்தனை நாள் பொதுப்பார்வைக்கு வராமல் தங்கள் ஊருக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருந்த ஒரு கூத்து வடிவத்தை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்துவிட்டார் ஆறுமுகம்.
இந்த கூததைப் பற்றி இன்னும் பல தகவல்கள் சொல்ல வேண்டியிருக்கிறது. அவற்றைப்பற்றி எனக்கு முழுமையாக தெரியாத நிலையில் அற்புதமான இந்த கூத்தை வெளிக்கொண்டு வரும் காரியத்தைச் செய்த ஆறுமுகத்தை ஓஹோவென்று பாராட்டிவிட்டு அமைவதைத்தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை வாழ்க ஆறுமுகம்.
Wednesday, May 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment