முத்தைய்யா படையாச்சி
சென்னையில் எங்கள் வீட்டு வாசலில் ஒரு நீலமாமரம் வைத்திருக்கிறேன். 1987-ல் இந்த வீட்டைக் கட்டிக்கொண்டு நாங்கள் இங்கு வந்தோம். அதற்கு முன் வாலாஜா சாலையில் கலைவாணர் அரங்கத்துக்கு முன் (இப்போது அங்கு கலைவாணர் அரங்கம் இல்லை, புதிய சட்டப்பேரவை கட்டுவதற்காக அதை இடித்துவிட்டார்கள். ஆனால் அதைவிட அழகான ஒன்றை கட்டப்போவதாக நம் முதல்வர் சொல்லியிருக்கிறார்.) க.நா.சு. குடியிருந்த வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். க.நா.சு. டெல்லிக்கு போய்விட்ட பிறகு நாங்கள் அங்கு குடிபோனோம். அது 48, வாலாஜா சாலை. 1987-ல் இங்கு வீடுகட்டிக்கொண்டு வந்தபிறகு வீட்டுக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் முள்வேலி மட்டும் இருந்தது. சுற்றிலும் அதுவும் மிகவும் அழகாகத்தான் இருந்தது. அதில் நாங்கள் பூசணி, பரங்கி, சுரை, பாகல், பீர்க்கு முதலியவற்றை படரவிட்டிருந்தோம். அவை எல்லாம் ஏராளமாக காய்த்தன. நாங்கள் சாப்பிட்டதுபோக தெருவில் உள்ளவர்களுக்கெல்லாம் கொடுத்தோம். தெருவில் உள்ளவர்கள் போதும் போதும் என்று அலுத்துவிட்டார்கள். அதோடு மா வலப்புறத்தில் என்றால் இடப்புறத்தில் ஒரு பெருநெல்லி வைத்திருந்தேன். ஒரு அருநெல்லியும் இருந்தது. முள்வேலி இருந்தபோதே இவை எல்லாம் வைக்கப்பட்டு மரங்களாக வளர்ந்துவிட்டன. வாசலில் கல்ச்சுவர் கட்டப்பட்டபோது அங்குதானே முளைத்து வளர்ந்து காய்கள் கொடுத்துக்கொண்டிருந்த கொய்யாமரம் ஒன்று வெட்டப்பட வேண்டியதாகிவிட்டது.
நான் ஏன் நீலமாமரத்தை தேர்ந்தெடுத்தேன். நான் சிறுவனாக இருந்தபோதே புஞ்சையில் எனக்கு பல மாமரங்கள் அறிமுகமாகிவிட்டன. எங்கள் வீட்டிலிருந்து சாலைக் குளக்கரையோடு காவிரிக்கு போகிறபோது குளத்தைதாண்டி வலப்புறம் ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. நாட்டு மாங்காய்கள். நாங்கள் காவிரிக்கு குளிக்கப்போகிறபோதெல்லாம் அந்த தோப்பின் மாமரங்களில் கல் விடுவோம். அதோடு காவிரிக்கரையின் ஓரத்தோடு போகும் சோழர்கள் உண்டுபண்ணிய சாலையில் இரண்டு புறமும் மாமரங்கள் இருந்தன. அவற்றை காவிரிக்கு மேல்கையில் உள்ள கீழையுரில் யாரோ வழக்கமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த மரங்களில் அக்ரகாரத்திலிருந்து போன நாங்கள் மட்டுமல்ல வடுவத்தெருவிலிருந்தும், கக்களத் தெருவிலிருந்தும் எங்கள் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்துதான் கல்விடுவோம். பசங்களை கிழக்கிலும் மேற்கிலும் பார்த்துக்கொண்டிருக்கச் சொல்லிவிடுவோம். மரங்களில் ஏறி பறிப்பதும் உண்டு. அப்போது எனக்கு நிறைய நாட்டு மாங்காய்களின் பெயர்கள் தெரிந்திருந்தன. இப்போது என் நினைவில் இருப்பது பச்சரிசி மற்றும் மஞ்சள் நாரி இரண்டு மட்டும்தான். பின்னால் சாலைகுளத்தின் மேல்கையில் இருந்த காய்ப்பு மாறிப்போன மேலும் பழக்கம் மாறிப்போன இலுப்பை தோப்புகளை வெட்டிவிட்டு அதில் வாழை வைத்துவிட்டார் மொட்டைய நாயக்கர். அதோடு காவிரிக்கரைச்சாலையில் நாங்கள் குளிக்கும் கரைக்கு எதிரில் இருந்த குட்டைக்குப் பின்னாலும் தொலைவில் உள்ள ஒரு தலைப்பிலிருந்து ஓடிவந்து கொண்டிருந்த கிடாரங்கொண்டான் வாய்க்காலின் ஒரு சிறிய தொடர்ச்சி ஒன்று எங்கள் குளிக்கும் துறைக்கு மேல்கையில் சேரும் இடத்திற்கு வடகையிலும் பெரிய வாழைத்தோப்புகளும் மாங்கன்றுகளும் வைக்கப்பட்டிருந்தன. புஞ்சையில் நாட்டு மரங்களைத்தவிர ஒட்டு மரங்களை கொண்டுவந்து பரப்பியவர் மொட்டைய நாயக்கர்தான். அப்போதுதான் கௌதாரி முதலியவற்றை தெரிந்துகொண்டேன். மற்றவற்றை ஒட்டு மாங்காய் என்று பொதுப்பெயரால் அழைத்து அவற்றின் உண்மையான பெயரை தெரிந்துகொள்ள முடியாமல் செய்துவிட்டார்கள்.
ஆனால் இந்த நீலம் மட்டும் எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்திருந்தது. இந்த நீலத்தை நான் மொட்டைய நாயக்கரிடமிருந்து தெரிந்து கொண்டேன் என்பதற்கும் முன்பாக முத்தைய்யா படையாச்சியிடமிருந்து தெரிந்துகொண்டுவிட்டேன். முத்தைய்யா படையாச்சி மிகவும் அபூர்வமான ஒரு மனிதர். அவர் கருப்பாக இருந்தார். கிராப்புத்தான் வைத்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல அடிக்கடி க்ஷவரம் செய்யாத முகம். அவர் மீசை மட்டும் வைத்துக்கொண்டிருந்தாரானால் இன்னும் பிரமாதமாக இருந்திருப்பார். பெரிய தொந்தி. க்ஷவரம் செய்து வளர்ந்த மயிர் அடர்ந்த மார்பு. தொந்திக்கு கீழ் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கையில் ஒரு அரிவாளோடு அவர் போவார். அவர் எங்கள் நிலங்களை குத்தகைக்கு எடுத்துக்கொண்டிருந்ததால் அக்ரகாரத்தோடு அவர் மேற்கே போவது எங்கள் வீட்டுக்கு வந்து விட்டுத்தான். அவர் கிடாரங்கொண்டானில் உள்ள காவிரிக்கரையை ஒட்டிய பள்ளக்கொல்லைக்காரர், பள்ளக்கொல்லையில் படையாச்சிகள் தான் இருந்தார்கள். அவர்களைக் கண்டு புஞ்சை கிடாரங்கொண்டான் இரண்டுமே சற்று பயத்துடன் இருந்தது. கிடாரங்கொண்டானில் எப்படியோ எங்கள் புஞ்சையில் தங்களை மிகவும் உயர்வாக நினைத்துக்கொண்டிருந்த ஆளுமை பரவலாக இருந்தது. இதற்கு ஓர் உதாரணம் சொல்லவேண்டுமானால் பள்ளக்கொல்லையில் உள்ள இளைஞர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்க மதுரையில் இருந்து வந்திருந்த ஒருவர் குடித்துவிட்டு சாலையில் பாவாடை முதலியார் வீட்டு வாசல் முன் கலாட்டா செய்தார் என்று அவர் வீட்டிற்கு எதிர் வீட்டுலிருந்த சொக்கலிங்க முதலியார் அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து ஒரே வெட்டாக வெட்டிச் சாய்ந்துவிட்டார். ஆனால் பின்னால் அவர் விடுதலையாகி வந்துவிட்டார். இந்த பள்ளக்கொல்லையில் இருந்து வருபவரான முத்தைய்யா படையாச்சியின் முலம்தான் நான் நீல மாந்தோப்பை முதலில் தெரிந்துகொண்டேன். அது கிடாரங்கொண்டான் காவிரிக்கரையை ஒட்டி இருந்தது. அதை முத்தைய்யா படையாச்சி குத்தகைக்கு எடுத்திருந்தார். நீல மாமரம் என்பது மிகவும் உயரமாக வளராமல் படர்ந்து வளரக்கூடியது என்றுதான் நான் எங்கள் வீட்டில் அதை வைத்தேன். அதை முத்தைய்யா படையாச்சியின் ஞாபகமாகவும் தான் வைத்தேன். முத்தைய்யா படையாச்சி எங்கள் வீட்டுக்கு நன்றாக பழுத்த நீல மாம்பழங்களை ஒரு பிரம்புக் கூடையில் வைத்துக்கொண்டு வந்து கொடுப்பார். அவர் காவிரிக்கரை ஓரத்தில் உள்ள பிரப்பங்கொடிகளை குத்தகைக்கு எடுப்பார். அவற்றை வெட்டி கூடை பின்னும்போது சிறியதிலிருந்து பெரியதுவரை பல கூடைகளை எங்கள் வீட்டுக்கு கொண்டுவந்து கொடுப்பார். அவற்றின் தோற்றம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது. லயன்கரை என்று நாங்கள் சொல்லும் காவிரிக்கரை ஓரத்தில் பெரிய புதராக வளர்ந்து இருக்கும் புங்கந்தழைகளை வெட்டிக்கொண்டு வந்து எங்கள் நிலத்துக்கு பசுந்தழை உரமாக அவர் போடுவார். எங்கள் நிலத்தை லாபம் சம்பாதிப்பதற்காக அவர் குத்தகைக்கு எடுத்து இருந்தார் என்பதைவிட புஞ்சைநிலங்களிலும் (திடல்) தோப்புகளிலும் வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு நஞ்சையில் வேலைசெய்ய வேண்டும் என்ற திருப்திக்காகவே அவர் எங்கள் நிலங்களை குத்தகைக்கு எடுத்திருந்தார். இப்போது எங்கள் வீட்டில் உள்ள நீலமாமரம் அவர் நினைவை எனக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)

நான் 6 .கீழையூர், மேலத்தெரு தாங்க. உங்க பதிவை படித்த பின்பு எனக்கு என் ஊர் ஞாபகம் வந்துவிட்டது . எங்க குடும்பம் அரிதாஸ், சிவதாஸ், ராமதாஸ் கேள்விப்பட்டு இருக்கீங்களா? என் பெயர் கலைக்குமார்.
ReplyDeleteவாழ்க வளமுடன்